கும்பகோணம், ஜன. 1 –
கும்பகோணம் அருகே புளியம்பேட்டை கிராமத்தில் சிறுவன் உட்பட 13 பேர்களை வெறிநாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதில் மூவர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் இன்று காலை தெருவில் சுற்றித்திறிந்துக் கொண்டிருந்த வெறிநாய் அப்பகுதியில் வசிக்கும் ஜெயபாரதி என்பவரை கடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த நாய் தொடர்ச்சியாக ராமதாஸ், மற்றும் அவரது மகன் மகிவரன் (5) ரேணுகா (30) பாங்கம்மாள் (60) என 13 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது. உடனடியாக ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு 13 நபர்களை கடித்த வெறி நாயை அடித்துக் கொன்றனர். வெறிநாய் கடித்த 13 நபர்கள் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் . இதில் மகிவரன், ரேணுகா , பாங்கம்மாள் ஆகிய இம்மூவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
புளியம்பேட்டை கிராமத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை உள்ளாட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக குழந்தைகளையும் முதியவர்களையும் குறிவைத்து தெருக்களில் சுற்றித்திறிந்துக் கொண்டு இருக்கும் கால்நடைகள் மற்றும் தெரு நாய்களால் தாக்குதல் ஏற்பட்டு காயம் அடைந்து வருகிறார்கள். சமீபத்தில் பூங்காவில் நாய் கடித்து 60 க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு குழந்தை ஒன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, அதுப்போன்றே, சாலைகளில் கால்நடைகளால் வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்கி அவர்களுக்கு காயம் மற்றும் உயிரிழப்பும் ஏற்படும் நிகழ்வுகளும், பரவலாக தமிழகம் முழுக்க நடைப்பெற்று வருகிறது. ஆதலால் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர உள்ளாட்சி பேரூராட்சி பெரு நகர ஊராட்சிகள் இது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்துகிறார்கள்.