திருவாரூர், மார்ச். 03 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் இளையோர் பாராளுமன்றம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் என்ற தலைப்பில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து இவந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்சியின் போது, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள் எனவும், ஆகவே, மாணவர்கள் தினசரி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், மேலும் தினமும் 30 நிமிடங்களாவது செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை இன்றைய நாளிலிருந்து தொடங்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கிடையே எழுச்சிவுரை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய நாகப்பட்டினம் தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் செல்வராசு நாடாளுமன்றத்தில் நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், மேலும் அவ் அவைகளின் நடவடிக்கைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் பேசிய மனிதவள தொழில் முனைவோர் பயிற்சியாளர் மணிகண்டன் ஜி 20  மாநாட்டின் தலைவர் பதவியின் முக்கியத்துவம் குறித்து  மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இளையோர்  பாராளுமன்றத்தில்  சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் மற்றும் நேரு யுவகேந்திரா திட்ட உதவியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வந்திருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சென்னையில் நடைப்பெற்ற அரசு விழா ஒன்றில் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு நடைப்பெறும் நிகழ்வுகள் குறித்து மாணவர்களும், மற்றும் பொதுமக்களும் அறிந்துக் கொள்ளும் வகையில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here