குடவாசல், மார்ச். 11 –
குடவாசல் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் இத்திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அவ்வாலயத்தில் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வமேத பூஜைகள் என சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதனத் தொடர்ந்து, ஆனந்தவல்லி தாயாருக்கும் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் மிகவும், விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின், தொடர்ந்து.. மாங்கல்ய தாரணம் எனும் அம்பாளுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
.தொடர்ந்து, பூர்ணாஹூதியுடன் ஆனந்தவல்லி தாயாருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து ஒன்பது வகையான மஹா தீபாராதனைகள், பஞ்ச ஆரத்தி காண்பிக்க பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் நடப்பு ஆண்டில் தேர்வெழுதப்போகும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வில் வெற்றியடைய வேண்டியும், கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடவும், திருமணம் ஆன மகளிருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திடவும், மேலும் அனைவரும் முன்னெடுக்கும் நல்காரியங்கள் அனைத்தும் வெற்றியடைந்து, வீடு மற்றும் நாட்டில் செல்வம் செழித்தோங்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் பிரார்த்தனை செய்தனர்.
இவ்விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் ஸ்ரீ மஹாமேரு சேவா டிரஸ்ட் குழுவினர் மிகச்சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் வழி நடத்தி செய்து முடித்தனர்.