திருவாரூர், ஜூன். 06 –

63 நாயன்மார்களில் ஒருவரான சோமயாஜி மாற நாயன்மாரால் நடத்தப்பட்ட சோமயாகம் கோவில்திருமாளம் என்ற ஊரில் ஸ்ரீஅச்சம் தீர்த்த விநாயகர் சன்னதியில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், கோவில்திருமாளம் என்ற ஊரில் அமைந்துள்ள புராண சிறப்பு வாய்ந்த ஆலயம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயம். இவ்வாலயம் சோமயாகத்திற்கான தனி ஆலயம் என்ற சிறப்புக்குரியது.

இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீஅச்சம்தீர்த்த விநாயகர் சன்னதியில் 63 நாயன்மார்களில் ஒருவரான சோமயாஜிமாற நாயன்மார் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று சோமயாகம் நடத்த முற்பட்டதாகவும், அந்த யாகத்திற்கு இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமியை அழைத்ததாக இவ்வாலயத்தின் புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த புராண ஐதீகப்படி சோமயாஜிமாற நாயன்மார் ஸ்ரீஅச்சம்தீர்த்த விநாயகர் சன்னதியின் முன் சோமயாகம் நடத்திட அங்கு ஸ்ரீதியாகராஜ சுவாமி, தனது மனைவி நீலோத்பலாம்பாளுடன் எழுந்தருளினார்.  அப்போது ஸ்ரீதியாகராஜ சுவாமி அனைவரும் அறுவருக்கும் வகையில் 4 வேதங்களை நாயாக  கொண்டு தன்னுடன் அழைத்து வந்தும், இறந்த கன்று குட்டியினை கழுத்தில் சுமந்தும்,  தலையில் அம்பிகையைமது குடமாக சுமந்தும் தாரைதப்பட்டை முழங்க சோமயாகத்தில் நுழைந்தார்.

அப்போது அங்கு யாகம் செய்துவந்த வேதவிற்பன்னர்கள் மற்றும் பக்தர்கள் யாகத்திற்கு வந்தது ஸ்ரீதியாகராஜ சுவாமி என தெரியாமல் சுவாமியின் அறுவறுக்கத்தக்க நடவடிக்கையினை கண்டு பயந்து நாலாபுறமும்  சிதறி ஓடினர்.  ஆனால் சோமயாஜிமாற நாயன்மார் மட்டும் எவ்வித சலனமின்றி யாகத்திற்கு வந்திருப்பது இறைவன் ஸ்ரீதியாகராஜ சுவாமி என அறிந்த நிலையில், அங்கு அசையாமல் நிற்க அவருக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமி காட்சியளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த புராண ஐதீகப்படி இந்த சோமயாகம் வைகாசி மாதம், ஆயில்ய நட்சத்திர தினத்தில் ஸ்ரீஅச்சம்தீர்த்த விநாயகர் சன்னதி எதிரே நடைபெற்றது.  இந்த யாகத்தில் கலந்துகொள்ளும் வகையில் ஸ்ரீமகாகாளநாத சுவாமி ஆலயத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதியாகராஜ சுவாமி, மற்றும் அம்பாள் ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீகாட்சி கொடுத்தார்.  அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு விஷேச வழிபாடு மகா தீபாரதனை நடைபெற்றது.  இதனை தொடர்ந்து ஸ்ரீதியாகராஜசுவாமி, அம்பாள் நீலோத்பலாம்பாள் தாரைதப்பட்டை முழங்க சோமயாகத்திற்கு எழுந்தருளினர்.

அப்போது சோமயாகத்தை நடத்தி வந்த சோமயாஜி நாயன்மாருக்கு ஸ்ரீதியாகராஜசுவாமி காட்சியளிக்க மகா தீபாரதனை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகோண்டு சோமயாகத்தையும், அங்கு எழுந்தருளி காட்சியளித்த ஸ்ரீதியாகராஜ சுவாமியையும் வழிபட்டனர்.

சோமயாகத்தை கோயில்திருமாளம் சிவயாக செம்மல் சிவஸ்ரீ  மாதுபுரிஸ்வரர்   சிவாச்சாரியார் மற்றும் அவரது குழுவினர் பிற்பாடு செய்து நடத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here