திருவள்ளூர், மே. 14 –

திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டு கிராம பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் தண்டார போட்டு கிராம மக்களுக்கு அறிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் அடங்கியது செம்பரம்பாக்கம் ஊராட்சி.1999 ஆம் ஆண்டு  ஒருங்கிணைந்த  செங்கல்பட்டு மாவட்டம் பிரித்த போது திருவள்ளூர் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஊராட்சி இணைக்கப்பட்டது.

ஆனால் இந்த ஊராட்சியில் உள்ள  பாப்பான்சத்திரம், பழஞ்சூர் ஆகிய இரண்டு கிராமங்களை மட்டும் வருவாய் துறை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வாக்குரிமை, கல்வி தொடர்பான சான்றுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதி மக்களுக்கு பட்டா, சாதி சான்று, பிறப்பு, இறப்பு சான்று என அரசு சேவை தேவைக்கு கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி வாழ் மக்கள் அலைக்கழிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பல முறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால்  தீர்வுக் காணப்படவில்லை. இது குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூஸில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் முழுமையாக இணைக்க   தமிழக செயலாளருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதன் பின்னரும் இரு கிராம மக்களுக்கு தீர்வு காணப் படவில்லை. இந்த நிலையில்  பிரச்சினைக்குரிய இந்த இரு கிராம பத்திரப்பதிவும் திடீரென காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் பிரச்சனை தீரும்வரை தற்காலிகமாக யாரும் ஸ்ரீபெரும்புதூரில் பத்திரபதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இதனை தண்டோரா போட்டு வீதி, வீதியாக தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் கூறுகையில் 1997 ஆம் ஆண்டில் இருந்து மாவட்ட பிரச்சனையை தீர்க்க மக்கள் போராடி வருவதாகவும், வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் சன் நியூசில் தங்கள் பிரச்சினை ஒளிபரப்பாகி அதன் வாயிலாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தும் இதுவரை இரு கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்கப்படாத நிலையில், அதற்குள் பத்திரபதிவும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டிக்கதக்கது. இது குறித்து மீண்டும் வழக்கு தொடர்வதோடு மக்கள் போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here