திருவாரூர், மே. 28 –
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது ஒரு அவசியமாக இருக்கிறது என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்தரங்கம் நேற்று முதல் இன்றுவரை நடைபெற்று வந்தது.
இந்த கருத்தரங்கத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார். இந்தியாவில் உள்ள 38 துணை வேந்தர்கள், என்ஐடி இயக்குனர்கள், ஐஐடி இயக்குனர்கள் கலந்து கொண்டு தேசிய கல்வி கொள்கையை மத்திய பல்கலை கழகங்களில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்றுடன் கருத்தரங்கம் நிறைவு பெறும் நிலையில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம், வேளாக்குறிச்சி ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளரை சந்தித்த பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் புதிய கல்விக் கொள்கையானது பாரதப்பிரதமர் 2020 ஆண்டு உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் இந்த தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய கல்விக் கொள்கையை இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது ஒரு அவசியமாக இருக்கிறது என்றும், மேலும் புதிய கல்விக் கொள்கையை வெகு விரைவாக புதுச்சேரியில் அமல்படுத்துவோம் என்றும் பேட்டி அளித்தார்.
பேட்டி : நமசிவாயம் கல்வித்துறை அமைச்சர் புதுச்சேரி