கொழும்பு, செப். 15 –
கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தினை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி அதனை அந்நாட்டு அரசு திறந்து உள்ளது.
இன்று முதல் இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை காண்பதற்கு அம்மயத்தில் உள்ள தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும். மேலும் அதனைக்காண்பதற்கு 10 வயதிற்கு குட்பட்டவர்களுக்கு ரூ. 200 முதல் 500 ரூபா வரையிலும், மற்றவர்களுக்கு ரூ 500 முதல் ரூ. 2000 வரையிலும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், இத்தாமரை கோபுரம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி 28ஆம் தேதி முடிவடைந்து அதனை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது.
மேலும், இந்த திட்டத்திற்காக செலவுகளில் சீன நிறுவனத்தின் பங்களிப்பாக 88.65 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், மீதம் உள்ள தொகையினை இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் அறிவித்ததுடன், 2024ஆம் ஆண்டுக்குள் கடன் தவணைக் கொடுப்பனவுகள் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.