திருவாரூர், நவ. 25 –
போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கலியுக கண்ணன் இவர் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில், அதுக்குறித்து உள்ளூர் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனுக்கள் வழங்கியதாகவும், அப்புகார் மனுக் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் உள்ளூர் நிர்வாகம் எடுக்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து அதன் தொடர் நடவடிக்கையாக அவரும் அப்பகுதி மக்கள் சார்பிலும் அங்கு புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2021 வருடம் அக்டோபர் மாதம் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்திற்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து அம்மனுக் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் 2023 நவம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் தனி அலுவலருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமாரிடமிருந்து முதல்வரின் முகவரி துறை தனி அலுவலருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் ஒன்று கலியுக கண்ணன் முகவரிக்கு வந்துள்ளது.
அக்கடிதத்தில் கடந்த 2022-ல் (MGNREGS) மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 500 மீட்டர் தொலைவிற்கு ரு. 13.34 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் தெரிவித்துள்ள அப்பதில் கண்டு, கலியுக கண்ணன் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் என அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் போடப்பட்ட அச்சாலையை தேடி வருகின்றனர் என்கின்றனர்.
மேலும் அப்பிரச்சினைக் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது, தவறான தகவலளித்துள்ள நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை அரசு மேற்கொண்டு தவறுயிழைத்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும், தினந்தோறும் சாலை வசதியில்லாமல் அப்குதியில் வசிக்கும் மக்களுக்கான அடிப்படை வசதியான சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
பேட்டி: கலியுக கண்ணன், பனங்குடி.





















