தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருப்பதால் மாவட்டத்தில் உள்ள 9 தாலுக்கா அலுவல கங்களும் வெறிச் சோடி காணப்படுகிறது. அதனால் வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட பிற சான்றுகள் பெற முடியாமல் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முது நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் என இரண்டு கட்ட போராட்டங்களை நடத்திய வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை அலுவலகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், தஞ்சை திருவையாறு பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் பூதலூர், ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி என ஒன்பது தாலுகா அலுவலகங்களும் மூடப்பட்டு உள்ளது.