கும்பகோணம், டிச. 22 –
17 துறைகளை உள்ளடக்கியதும், அதில் 12 ஆய்வுத்துறைகளை கொண்டும் 167 ஆண்டு காலமாக, கும்பகோணத்தில் இயங்கி வரும் அரசினர் கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து இருந்து கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி கல்லூரி நேரங்களில் பேருந்துகள் இயக்கக்கோரியும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி வலியுறுத்தியும், அக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து கல்லூரியின் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மாணவர்கள் தரப்பில் இப்போராட்டம் குறித்து, தெரிவிக்கும் போது கல்லூரிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். திருப்பனந்தாள், அணைக்கரை, திருநாகேஸ்வரம், எஸ் புதூர், சுவாமிமலை, கபிஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் குறைந்த அளவிலான பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால்,
இதில் அதிக அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பணிக்கு செல்லும் பெண்களும் பயணிக்க வேண்டி உள்ளது. மேலும் பேருந்தில் கூட்டம் அதிகம் இருப்பதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.
இதனால் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவும், மேலும் பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்து இயக்குகிற நமது அரசு, ஏன் பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கப்படுவதில்லை எனக்கேள்விகளை எழுப்பியவாறு, மேலும், போதிய பேருந்துகள் இல்லாததால்தான் மாணவ மாணவிகள் கல்லூரிக்கு பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வர முடிவதில்லையெனவும், குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்.
மேலும் இனியாவது போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினைக் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படும் முன், இந்த வழித்தடத்தில் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டுமென அவர்கள் தெரவித்தனர். மேலும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் கோரிக்கை விடுத்தனர்.