திருவாரூர், ஜன. 14 –
திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறார்களின் ஆவாரத்துடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று பொங்கல் விழா மற்றும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுடன் சிறப்பாக இவ்விழாவைக் கொண்டாடினார்கள்.
மேலும் இதில் மிதவேக சைக்கிள் போட்டி , உறியடித்தல், போன்ற போட்டிகள் நடைபெற்றன. மேலும் மாணவர்கள் வட்டமாக சூழ்ந்து கும்மி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொங்கல் பொங்கும் போது மாணவர்கள் சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் அதனைத்தொடர்ந்து, அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் முதியோர் விடுதிக்கு சென்று அங்குள்ள முதியோர்களுக்கு, குழந்தைகள் கரும்பு, வாழைப்பழம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறார்கள் மகிழ்ச்சியில் பெருக்கெடுக்க மனம் மகிழ்ந்தனர்.
மேலும் அப்பொருட்களைப் பெற்றுக்கொண்ட முதியவர்கள் தங்கள் வீட்டில் பொங்கலை கொண்டாடியது போல் நெகிழ்ச்சியுடன் இந்த பொங்கலை கொண்டாடினார்கள்.