பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை கூடத்தில் பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பாராட்டும் விதத்தில் சமூக சேவகர் கோ.ஆதிசுந்தரராஜன் தலைமையில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டாட்சியர் மதிவாணன் ஒவ்வொரு மாணவர்களையும் அழைத்து சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கௌரவப்படுத்தினார். மேலும் எதிர் வரும் போட்டிகளிலும் அவர்கள் மேன்மேலும் உயர்ந்து பல வெற்றிகளை பெற்றிட வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
அது மட்டுமின்றி கல்வி வளர்ச்சியிலும், பொன்னேரி வட்டாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அந்நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி, துணை வட்டாட்சியர்கள் சீனிவாசன், ஜோயிதாஸ், வழக்கறிஞர் குமாஸ்தா சங்க பொறுப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், நிலத் தரகர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் மோசஸ்கோபி, கஜேந்திரன் மற்றும் ஆலாடு அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த துரை, பயிற்சியாளர்கள் சூரியபிரகாசம், சிலம்பரசன், பகலவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை மேலும் சிறப்பித்தனர்.