திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலை மாவட்டம், சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜித்தா, மாவட்ட சமூகநல அலுவலர் (கூடுதல் பொறுப்பு) பா. கந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 31ந்தேதி அன்று சென்னையில் கொரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் 3ம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்காத வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்சியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோன தொற்று தடுக்கும் வகையில் 3ம் பாலினத்தவர்களுக்கு தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
மேலும் நோய் தொற்று தடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துவருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளதாக பெருமிதத்துடன் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்நிகழ்வில் அனைத்து 3ம் பாலினத்தவர்களும் தங்களைச் சார்ந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டமாட்டோம் எனவும் உறுதியளித்தனர்.