கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சனி என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பயம்தான் எழும் ஏனெனில் நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மேலும் அக்கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கி பலவிதமான வினைப்பலன்களை.தருகிறார் ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சனிக் கிரகம் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 30 வருடங்கள் ஆவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் அடுத்த திருநறையூரில் உள்ள பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள மங்கள சனி பகவனாக தனது இரண்டு மனைவிகள் உஷா தேவி, ஜெஷ்ட்டாதேவியுடனும், மாந்தி குளிகன் என்ற இருமகன்களுடன், காகவாகனம், கொடிமரம், பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.
மேலும், அவ்வாலயத்தில் சனி பெயர்ச்சியினை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் லட்சார்ச்சனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று மாலை சனி பெயர்ச்சி முன்னிட்டு ஸ்ரீ சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
அதற்காக சிறப்பு ஹோமம், நடைபெற்றதைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைப்பெற்று, சனி பகவானுக்கும் உஷா தேவி, ஜெஷ்ட்டாதேவி, மாந்தி, குளிகன் ஆகியோருக்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி மஞ்சள் பொடி திரவிய பொடி பால் தயிர் சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வித்து பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர் பிரபாகரன், கோவில் அர்ச்சகர் ஞானசேகரன், மற்றும் கோவில் நிர்வாகிகள் பணியாளர்கள் உபயோதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.





















