ராமநாதபுரம்:
பட்டம் பெற்ற பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது. அதில் ஒருவர் பெற்றோர் மற்றொருவர் ஆசிரியர் ஆவார்கள், என, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பட்ட மளிப்பு விழா பேரூரையில் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலனுக்காக துவங்கப்பட்ட கல்லுாரி செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி. இக் கல்லூரியில் பயின்று பட்டம் பெறுவது சிறப்பு. பட்டம் பெறும் மாணவ மாணவிகளுக்கு சில கடமைகள் உள்ளன. பெற்றோர், சமுதாயம், நாம் வசிக்கும் பகுதியைப் பார்த்து கொள்ள வேண்டும்.
சமுதாயம் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி உயரும் வகையில் கொள்கை குறிக் கோள்களை வளர்த்து கொள்ள வேண்டும். பட்டம் பெறும் பட்டதாரிகள் வாழ்க்கையில் இருவரை மறக்க கூடாது, அவர்களில் ஒன்று, உங்களை பெற்ற பெற்றோர் அவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும். குறிப்பாக இந்த பகுதிகளில் எத்தனையோ பெற்றோர்கள் தாங்கள் பட்டம் பெற்றிருக்க மாட்டார்கள். அதனால் தங்கள் மனதில் அவற்றை நிலை நிறுத்தி பல இன்னல்களுக்கு இடையில் தன் பிள்ளைகளை பட்டக்கல்வி படிக்க வைத்து குடும்பத்தின் முதல் பட்டதாரிகளாக ஆக்கி இருக்கலாம்.
அந்தளவு தியாகத்துடன் உங்களை படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்த உங்கள் பெற்றோர்களை உரிய முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக மாற்றம் இன்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த குடும்பத்தை காண்பது அரிதாகி விட்டது. பல பட்டதாரிகள் பணியின் காரணமாக இடப் பெயர்ச்சி செய்கின்றனர். வெளி மாநிலம் அல்லது வெளி நாடு என சென்று விடுகின்றனர். அது போன்ற சூழலில் பெற்றோர்கள் தங்க கூட்டில் இருப்பது போல் மூன்றாவது நபர் மூலம் பார்த்து கொள்கின்றனர். இதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
இரண்டாவது நபர் உங்களின் அறிவு கண்களை திறந்த உங்கள் ஆசிரியரை நீங்கள் என்றென்றும் மறக்க கூடாது. மிக உயர்ந்த பதவியில் ஒழுக்கத்துடன் இருப்பதற்கு உங்கள் ஆசிரியர்தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் சுதந்திரம் அடைந்த போது 1947ல் 20 பல்கலை கழகங்களும் 500 கல்லுாரிகளும் இருந்தன. இன்று 941 பல்கலை கழகங்களும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் உள்ளன.
அறிவார்ந்த சமுதாயம் உருவாகி விட்டதால் மாணவர்கள் தங்களை தினமும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சில குறிக் கோள்களுடன் இருக்க வேண்டும். அதில் கனவு காண வேண்டும் என நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது போல் கனவு காண வேண்டும். அந்த கனவு லட்சிய கனவாக இருக்க வேண்டும். அடுத்தது காலம் அதாவது நேரம் என்பது மிக மிக முக்கியம் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. எனவே நேரத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். காலத்தை மதித்து செயல்பட்டால் வெற்றி என்பது எளிதாக கிடைக்கும், இவ்வாறு பேசினார்.
பின் 28 முதுகலை பட்டதாரிகளுக்கும், 453 இளங்கலை பட்டதாரிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சாலிகு பல்கலை கழக அளவில் சாதனை படைத்த மாணவிகளுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பிலான ரொக்கப்பரிசை வழங்கினார்.
விழாவில் செய்யது அம்மாள் கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் ராஜாத்தி அப்துல்லா, கல்லுாரி முதல்வர் அமானுல்லா, நிர்வாக அதிகாரி சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.