நெல்லை:

நெல்லை மாவட்ட காங்கிரசின் தேர்தல் பணி ஆயத்த கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறோம். தேர்தல் பணிக்கான திட்டம், வியூகம் குறித்து கருத்து கேட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். நமது நாட்டில் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., உச்சநீதிமன்றம் என அனைத்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட அமைப்புகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் விரோத கொள்கைகளை மோடி அரசு செயல்படுத்தி உள்ளது. ஜி.எஸ்.டி., பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவை உதாரணங்கள் ஆகும். மத்திய பா.ஜனதா அரசு, தமிழக அ.தி.மு.க. அரசு ஆகியவை லஞ்ச ஊழலில் திளைத்து வருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இதுவரை பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை. பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி அவைக்கு வருவதும் இல்லை. நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பா.ஜனதாவின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட தோல்வியை திசை திருப்ப ராணுவ நடவடிக்கையை பெரிதாக பேசி வருகின்றனர். இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியல் ஆக்குகிறார்கள். காஷ்மீர் புலவாமா தாக்குதல் குறித்து மத்திய உளவு பிரிவு எச்சரித்த பிறகும் மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டபோது, மோடி அவரை மீட்க நடவடிக்கை எடுக்காமல் பா.ஜனதா கட்சி பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

ஆனால் ராகுல்காந்தி நாட்டின் முன்னேற்றத்துக்கு தொலைநோக்கு பார்வையில் பல திட்டங்களை முன்னெடுத்து வைத்துள்ளார். ஒரு குடும்பத்துக்கு தேவையான அடிப்படை வருமானத்தை உறுதி செய்து உள்ளார். ஆனால் மோடி பன்னாட்டு நிறுவனங்களுக்காக மட்டுமே பணியாற்றுகிறார்.

எங்களின் முயற்சி மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைப்பதுதான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக வருவார். அதற்காக அனைத்து தரப்பினரும் இப்போதே தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here