திருவண்ணாமலை டிச.15-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நேற்று (14.12.2021) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (ம) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம்;; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.30.31 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 7 இலட்சத்து 22 ஆயிரம் குழுக்களுக்கு ஒரு இலட்சத்து நான்காயிரத்து பதிமூன்று கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு எழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 441 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.88 கோடி வங்கி கடன் இணைப்பும், 1202 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.50 கோடி மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதியும், 538 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.0.81 கோடி மதிப்பிலான சுழல் நிதியும், 639 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.03 கோடி மதிப்பிலான நலிவுற்றோர் நிதியும், 54 போது சேவை மையம் சென்டரும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.8.70 இலட்சம் மதிப்பிலான உற்பத்தியாளர் குழுக்களுக்கு துவக்க நிதியுதவியும், ஆக மொத்தம் 2885 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 26172 உறுப்பினர்களுக்கு 30.31 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், சி.கெங்கப்பட்டு ஊராட்சியில் துளசி மகளிர் குழு உறுப்பினராக உள்ள எஸ்.காந்திமதி தென்னரசி அவர்களிடம் காணொலி காட்சி வாயிலாக உரையாடினர். இந்த உரையாடலின் போது, காந்திமதி அனைத்து மகளிர் சார்பாகவும், மகளிர் குழுக்கள் சார்பாகவும், மறைந்தும், நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுயஉதவிக்குழுவின் மூலம் உங்களின் அனுபவம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து கேட்டதற்கு, சுயஉதவி குழுக்களில் வெளியில் வராத மக்கள் வெளியில் வந்தும், மகளிர்கள் சுயமாக தொழில் செய்வதற்கும், நம்முடைய தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களால் 10 வருடத்திற்கு முன்பு, பழைய ஆட்சியில் சுய உதவிக்கடன், பொருளாதார கடன் அதிகம் வாங்கி இருக்கிறோம். அதன் மூலம் மகளிர் முன்னேற்றமடைந்து ஒவ்வொரு குடும்பமும் 10,000 முதல் 15,000 வரை சுயமாக வருமானம் ஈட்டுகிறோம். தற்சமயம் மகளிர் குழுக்கள் வாங்கி அனைத்து கடன்களும் கொரோனா காலத்தில் முழுமையாக தள்ளுபடி செய்து, அனைத்து மகளிர் வறுமையும் தீர்த்து உள்ளீர்கள் என்று பெருமையுடன் கூறி கொள்கிறோம்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியை ஒழிக்க வேண்டும். நெகிழி பயன்படுத்த பயன்படுத்த நிலத்திடி நீர் மட்டும் குறைந்து கொண்டே போகும். எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாத நிலை வரும். நெகிழை வெளியில் தூக்கி எறியும் போது, அதை கால்நடைகள் உண்டு, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று, கூட்டங்கள் மூலமாகவும், வீதி, வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நெகிழிற்கு பதிலான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்றங்கள் உண்டாக்கி வருகிறோம் என்றார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுச்சூழல் குறித்து, விழிப்புணர்வு செய்தமைக்கும், நெகிழி குறித்த பிரச்சாரம் செய்தமைக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டினார்கள்.
பொதுப்பணித்துறை அமைச்சர் பேசியதாவது, மகளிர் சுய உதவிக்குழு என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக துவக்கி வைத்தார். அப்படிப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடர்ந்து இப்போது இருக்கிற தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் அவரே நேரடியாக சென்று, மகளிர் குழுக்களுக்கு நிகழ்வை தருகின்ற வகையில், நம்முடைய மாவட்டத்திற்கும் வருகை புரிந்து ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கினார். அதற்கு பின்னர் 10 ஆண்டு காலம் மகளிர் சுய உதவிக்குழு சிதைக்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தாண்டு சமூக பொருளாதாரத்தில் மகளிர் குழுக்கள் மேம்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இந்தாண்டில் வழங்க அந்த அறிவிப்பினை சட்டமன்றத்தில் அறிவித்தார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10,000 மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்குகின்ற ஒரு நிகழ்;ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பல்வேறு மாவட்டங்களில் வரப்பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் கருத்துகளை கேட்ட போது ஒற்றுமை தான் நம்முடைய பலம் என்ற அடிப்படையில் நம்முடைய, திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு எடுத்துக்கொண்டால் ஊரகப்பகுதியில் 14,666 குழுக்கள், 2,10,396 உறுப்பினர்கள் நம்முடைய மாவட்டத்தில் உள்ளனர். நகர பகுதியில் 1,732 குழுக்கள் 29,530 உறுப்பினர்கள் ஆக திருவண்ணாமலை மாவட்டத்தில் 19,382 குழுக்களுக்கு 2,39,965 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பான குழுவாக நம்முடைய மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் 2021-2022 என்ற நிதியாண்டில் 1132 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு என்று எடுத்து கொண்டால் நம்முடைய மாவட்டம் 86% தாண்டி கொண்டுள்ள நிலையில் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் எல்லாம் அதில் கொஞ்சம் அக்கறை உடன் 16,219 குழுக்களுக்கு கிட்டதட்ட 2,20,592 பேர் மகளிர் சுய உதவி குழுக்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
எனவே, மகளிர் சுய உதவிக்குழுக்களில் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் முழுமையாக நம்முடைய மாவட்டத்தில் 100 % கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ வேண்டும். அதற்கு உங்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அதனால் உங்களுடன் பழகும் சகோதரிகளுக்கும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கும் தடுப்பூசி வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மகளிர் சுய உதவிக்குழு, மகளிருக்கான சொத்துரிமை, மகளிருக்கான வாக்குரிமை என மகளிருக்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் இந்த ஆட்சி தான் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப் ., சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஓ.ஜோதி (செய்யாறு) மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் திருமதி.பெ.சந்திரா, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் பா.வசந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திருமதி.பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழுத்தலைவர்கள் திருமதி.கலைவாணி கலைமணி (திருவண்ணாமலை), திருமதி.அன்பரசி (கலசபாக்கம்), திருமதி.பரிமளா (தண்டராம்பட்டு), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.