சென்னை, ஜன. 13 –
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் முதலமைச்சராக பொறுப்பேற்று தனது தலைமையிலான அரசு எட்டு மாதங்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றிவுள்ளது என்பது குறித்து தமிழக மக்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாக தெரிவுத்துள்ளார். அதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் கடந்த 2021 மே 7 ஆம் நாள் உங்களது அன்பான உத்தரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்!
‘வாக்களித்தவர்க்கு மட்டுமல்ல – வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து நான் முதலமைச்சராக இருப்பேன்’-என்று உறுதி எடுத்துக்கொண்டேன். பொறுப்பேற்றுக் கொண்ட உடனே ஐந்து முக்கியமான வாக்குறுதிகள நிறைவேற்ற நான் கையெழுத்திட்டேன்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய துயரத்தைப் போக்குகின்ற வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கின்ற குடும்பத்துக்கு தலா 4000 ஆயிரம் ரூபாய் தரப்படும். அதில் முதல் கட்டமாக 2000 ரூபாய் இந்த மே மாதத்துலயே வழங்கப்படும் என்கிற முதல் கையெழுத்திட்டேன்.
ஆவின் பால் விலையை, லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் இரண்டாவது கையெழுத்து.
அரசு கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நகரப் பேருந்துகளில், பெண்கள் கட்டணம் இல்லாம பயணம் செய்வதற்கான உத்தரவில் மூன்றாவது கையெழுத்து.
தொகுதிகள் தோறும் நான் பெற்ற மனுக்கள் மேல் நடவடிக்கை எடுக்க, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்கிற திட்டத்தின் கீழ், புதிய துறையை உருவாக்குவதற்கான உத்தரவில் நான்காவது கையெழுத்து.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்பவகளின் இன்னலைக் குறைக்கின்ற வகையில், அதுக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத்திட்டத்தில் ஏற்கும் என்பதற்கான ஐந்தாவது கையெழுத்தை போட்டுள்ளேன்.
இப்படி ஒவ்வொரு நாளிலும் மக்களுக்காக நான் போட்டக் கையெழுத்துப் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
கோடிக்கணக்கான மக்களின் தேவையை… லட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்பை, ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேற்றிக் காட்டிய அரசுதான் இந்த அரசு என அக்காணொலிக் காட்சியில் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் சுற்றி நான் பெற்ற மனுக்களில் இரண்டரை லட்சம் மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன்.
அதைப்போன்று, கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாயை 2.15 கோடிக் குடும்பங்கள் பெற்றுள்ளார்கள். மேலும் இக்காலக் கட்டங்களில் கொரோனா கால நிவாரணமாக 13 பொருட்களை 2.15 கோடி குடும்பங்கள் பெற்றுள்ளார்கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 80 ஆயிரத்து 138 இல்லம் தேடி கல்வி மையங்களை தொடங்கி யிருக்கிறோம். பள்ளிக் கூடத்துக்கு வராமல் நின்ற குழந்தைகளில், 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு திரும்ப சேர்த்திருக்கிறோம். 18.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 பவுனுக்கு கீழே நகைக் கடன் பெற்ற 13.50 லட்சம் குடும்பங்களுக்கு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குபவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தநாட்டுக்காரராக இருந்தாலும், முதல் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்கும் என அறிவித்தோம். அதில் 4 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசை 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறோம். இவை அனைத்துக்கும் மேலாக கோடிக்கணக்கான மகளிர் நித்தமும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லை என்ற மாபெரும் உரிமையை வழங்கி உள்ளோம். மக்கள் கடலில் மாபெரும் மகிழ்ச்சி அலை எழும்புவதற்கு இதுதான் காரணம். ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் போய்ச்சேரும் வகையில் செயல்பட்டுள்ளோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள மட்டுமில்லாமல்- சொல்லாத வாக்குறுதிகளயும் இந்த அரசு நிறைவேற்றும்.
ஆளுநர் உரையில 66 அறிவிப்புகள வெளியிட்டு- 49 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 8 மாதத்தில்- ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110-ஆவது விதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 1641 அறிவிப்புகள வெளியிட்டுள்ளோம்
அதில்- 1238 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டப்பட்டுவிட்டது. அதாவது வெளியிட்ட அறிவிப்புகளில்- 75 விழுக்காட்டினை நிறைவேற்றப் பட்டுள்ளது.
மீதி இருக்கிற அறிவிப்புகள்- புதிய அறிவிப்புகள் நிறைவேற்றபடுவது குறித்து என்னோட அடுத்த உரையில் தெரிவிப்பேன்.
ஒன்று மட்டும் நிச்சயம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் இந்த ஸ்டாலின் நிறைவேற்றுவேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் ..
தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகக் கொடுத்துள்ளோம். அதனால் அதை வைத்து யாரும் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு நான் சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை இந்த ஆட்சியில் செயல்படுத்தி இருக்கிறோம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதிஎண் 110 இன் கீழ் நான் அறிவித்த பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு சார்பில் புத்தகமாக போட்டு வெளியிட்டு இருக்கிறோம்.
அதேபோல் சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் பெருமக்கள் துறைவாரியாக அறிவித்த அறிவிப்புகளும் 500 பக்க புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொது வெளியில் இருக்கிறது. அந்த அளவிற்கு வெளிப்படையான நிர்வாகம் தான் இந்த ஸ்டாலினின் விருப்பம். அதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு சொல்லித்தந்தது.
எதையும் சும்மா வாய்வார்த்தைக்குச் சொல்லி – மறந்து விடுபவர்கள் அல்ல நாங்கள். அதை கல்வெட்டுப் போல மனதில் பதிய வைத்துக் கொண்டு செயல்படுத்துவோம். செயல்படுத்தியும் வருகிறோம்.
கோப்புகள் எப்போதும் எந்தச் சூழலிலும் தேங்கக் கூடாது என்று நான் அமைச்சராக இருந்த போது என்னிடம் அடிக்கடி தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். அந்த அடிப்படையில் என்னிடம் வரும் அனைத்து மனுக்களையும் உடனுக்குடன் முடிவுகளை எடுத்து உத்தரவுகளை போட்டிருக்கிறேன் என்பதை பெருமையாக – கம்பீரமாக நான் சொல்லிக்கொள்கிறேன்.
மே மாதத்தில் வந்தவை 144 கோப்புகள்
சூன் மாதத்தில் வந்தவை 220 கோப்புகள்
சூலை மாதத்தில் வந்தவை 227 கோப்புகள்
ஆகஸ்ட் மாதத்தில் வந்தவை 241 கோப்புகள்
செப்டம்பர் மாதத்தில் வந்தவை 422 கோப்புகள்
அக்டோபர் மாதத்தில் வந்தவை 450 கோப்புகள்
நவம்பர் மாதத்தில் வந்தவை 559 கோப்புகள்
– இவை அனைத்தையும் உடனுக்குடன் பார்த்து முடிவுகள் எடுத்துவிட்டேன்.
டிசம்பர் மாதத்தில் என்னிடம் தரப்பட்ட 420 கோப்புகளில் 356 கோப்புகளில் கையெழுத்து போட்டுவிட்டேன். மீதம் 64 கோப்புகள்- அதுவும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனையில் இருக்கிறது.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் பதவி ஏற்றுக்கொண்ட மே மாதம் முதல் என்னிடம் வந்த 2 ஆயிரத்து 683 கோப்புகளில் 2 ஆயிரத்து 619 கோப்புகளை பார்வையிட்டு அனைத்திலும் முடிவுகள் எடுத்து கையெழுத்து போட்டுள்ளேன்.
கோப்புகள் துரிதமாக நகர்வது தான் நல்லாட்சியின் முக்கியமான அடையாளம். அந்த அடையாளத்தின் நல்லரசாக இந்த அரசு செயல்பட்டுவருகிறது.
நான் மட்டுமல்ல, அமைச்சர்கள் அனைவரையும் அவர்களிடம் வரும் கோப்புகளை உடனுக்குடன் முடிவெடுத்து அறிவிப்புகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்பது மட்டுமல்ல -அதனை கண்காணித்தும் வருபவன் நான்.
கோப்புகள் தேங்காத அரசாக இந்த அரசை நடத்திக்காட்டி வருகிறேன்.
கோட்டையில் உட்கார்ந்து உத்தரவுபோடும் முதலமைச்சர் அல்லநான். மக்களோடு மக்களாக இருந்து அவர்கள் சிந்தனைகளை உணர்ந்து அறிந்து செயல்படுத்திக்காட்டும் முதலமைச்சராகச் செயல்பட்டு வருகிறேன்.
கொரோனாகாலமா? கொரோனாவார்டுக்குள் சென்று நோயாளிகளைக் கவனித்தேன். மழைவெள்ளமா? இடுப்பளவு தண்ணீரிலும் போய் மக்களைச்சந்தித்தேன். காஞ்சிபுரத்திலும், கன்னியாகுமரியிலும் எனது கால்கள் பயணித்தது. திருவள்ளூரிலும், திருப்பூரிலும் நான்வலம் வந்தேன்.
தஞ்சையிலும், திருச்சியிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுத்துவிட்டு இரவில் சென்னைக்குத் திரும்பிய நான் கொட்டும் மழையில் சென்னை இருப்பதைக் கண்டு அன்றைய நாள் நள்ளிரவு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பராமரிப்புப் பணிகளை முடுக்கி விட்டு நள்ளிரவு 2 மணிக்குத்தான் வீடு திரும்பினேன். மறுநாள் காலையில் மீண்டும் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடச் சென்றேன். கொரோனா தடுப்பூசியா- மக்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கே நானும் போய் பார்க்கிறேன். ரேசன் கடையில் பொருள்கள் வாங்குவதில் பிரச்சினையா- நானே நேரில் போய் ஆய்வு செய்கிறேன்.
காவல் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கப்படுகிறதா என நானே காவல் நிலையத்திற்குப்போய் பார்வையிட்டுள்ளேன். என்னை இப்படித்தான் பழக்கி இருக்கிறார் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள். மக்களோடு வாழ் என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. அப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். மக்களின் நேற்றைய தேவையை இன்று நிறைவேற்றித்தருபவனாக இருக்கிறேன். நாளையகோரிக்கையை இன்று உணர்பவனாக இருக்கிறேன். ஏனென்றால் நான் மக்களோடு மக்களாக இருக்கிறேன். உங்களுக்காகவே உழைக்கிறேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்றவாறு நன்றி வணக்கம் சொல்லி உரையை முடித்துள்ளார்.