ராமநாதபுரம், அக். 1- முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ம் தேதி லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த முடிவு செய்துள்ளோம் என மாநில செயலாளர் பைசல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு நடந்தது.

மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முகம்மது அய்யூப்கான் தலைமை வகித்தார். மாவட்ட துணை்தலைவர் முகம்மது பசீர், மாவட்ட பொருளாளர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் நசுருதீன், ஜகாங்கிர், மன்சூர், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாநில பொது செயலாளர் முகம்மது, மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம், மாநில செயலாளர் பைசல், பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் மாநாட்டு உரையாற்றினர். முன்னதாக மாநில செயலாளர் பைசல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாதத்திற்கு எதிராக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள் தொடர் பிரசாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. தீவிர வாத காரியத்தை யார் செய்தாலும் அவர்கள் மனித குலத்தின் எதிரிகளே. தீவிர வாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டிட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தி உள்ளோம். பாஜ அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை துாண்டப்பட்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதும், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ல் லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த அறிவித்துள்ளது என்றார். மாவட்ட செயலாளர் ஆரிப்கான் நன்றி கூறினார்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here