சமுதாய சிந்தனையுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அறம் விழுதுகள் அறக்கட்டளை
ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இணைந்து நடத்திய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அறம் விழுதுகள் அறக்கட்டளை சமுதாய சிந்தனையுடன் சமுதாயத்திற்கு தேவையான நற்குணங்களை பறைசாற்றும் வகையில் அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகள், கூட்டங்கள் நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் அறம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தாய்ப்பால் வாரவிழா நடத்தி தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை பெண்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களை வரவழைத்து சிறப்பு கருத்தரங்கம் நடத்தினர். அதனை தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் தற்போது பரவலாகி வரும் போதை பழக்கத்தால் ஏற்படும் அபாய விளைவுகளை விளக்கும் வகையில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் இணைந்து ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் அரண்மனை வரையிலான பேரணியை நடத்தினர். ராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி முன் துவங்கிய பேரணியை ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா தொடங்கி வைத்தார் . போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ராமநாதபுரம் அரசு மனநல மருத்துவர் டாக்டர் பெரியார் லெனின் பேசும்போது, பெரும்பாலும் போதை பழக்கம் மாணவர்கள் மத்தியில் எளிதில் சிலர் பரப்பி விடுகின்றனர். அந்த மாதிரி பரப்புவர்ககளை கண்டறிந்து மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதை என்பது 2 பிரிவாக மூளையை பிரிக்கும் அதாவது, ஒன்று வலி, மற்றொன்று மகிழ்ச்சி. இதில் போதை மகிழ்ச்சி தரும் என பலரும் தவறான சிந்தனையில்உள்ளனர். போதை பழக்கம் மிகழ்ச்சியை தராது மனநல நோயைத்தான் தரும். ஆரம்பத்தில் நல்லா இருப்பது போல் தெரியும். ஆனால் படிப்படியாக மூளை நரம்பு பாதிக்கும். பலர் பலவிதமாக கூறுவர். அதாவது, அவர் நன்றாக இரக்கிறாரே, என தங்களுக்குள் சமாதானம் செய்வர். ஆனால்அது தவறானது. எத்தனைபேர் உயிரிழப்பு என்பது எங்களை போன்ற மருத்துவர்களுக்குத்தான் தெரியும். போதை பழக்கம் இருதயம், மூளை, நுரையீரல் என ஒவ்வொரு பகுதியாக பாதிப்படைய செய்துவிடும். மாணவர்கள் போதையின் தீமைகளை நன்று அறிந்து கொள்ள வேண்டும். போதை பொருள் ஒருமுறை பயன்படுத்தினாலே மனநோய் வருவதற்கு ஆயிரம் காரணங்களாக அமையும். எனவே போதையின் பிடியில் சிக்காமல் எதிர்காலத்தை சிறந்து விளங்க போதையை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும், என்றார். நுண்ணறிவு குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் முகமது சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ஷேக் இபுராஹிம் உட்பட பலர் பங்கேற்றனர். பேரணியில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியவாறும் ராமநாதபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.