புதுச்சேரி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி மாநிலம், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் அருகே இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்டோரையும் அப்போது போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.