மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

அ.தி.மு.க.- பாரதீய ஜனதா கூட்டணியில் நிச்சயம் தே.மு.தி.க. இணையும். அது தொடர்பான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று அல்லது நாளை அது பற்றி தெரிந்துவிடும். அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி.

ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க.வில் இணைந்திருப்பதால் பாரதீய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாரிவேந்தர் மட்டுமல்ல, எவர் எங்கு சென்றாலும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும் தி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா.

தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர். விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.
மத சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியல்ல. தெரியவேண்டிய அனைவருக்கும் அது தெரிந்துள்ளது.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை பாரதீய ஜனதா அரசியல் செயல்வதாக கூறுவது சரியல்ல. பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது. வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், 2-வது கடமை எதிர்க்கட்சிக்கும், 3-வது கடமை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், 4-வது கடமை மக்களுக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here