திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சுற்றுச்சுழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும் எவ்வித இரசாயன கலவை அற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்டதுமான சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். இரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படி அக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக தயாரிக்கப்படும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இடத்தின் உரிமையாளரின் எழுத்து பூர்மான அனுமதிக் கடிதத்தினை பெற்று அத்துடன் மேற்படி ஊர்வலம் நடத்துவதற்கான முன் அனுமதிக்கோரும் விண்ணப்பத்துடன் சம்மந்தப்பட்ட அமைப்பாளர்கள் அருகில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்துறை அலுவலர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
விநாயகர் ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்ல உள்ள சிலைகளின் உயரம் மற்றும் பீடத்தின் அமைப்பு போன்ற விவரங்களை காவல்துறை அலுவலர்களுக்கு அமைப்பாளர்களால் உரிய காலத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். ஊர்வலத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் சிலைகள் ஊர்வலத்தின்போது மின்சாரம் செல்லும் மின் கம்பிகளை குறுக்கிடாத அளவிற்கு விநாயகர் சிலைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் இருபது நபர்களைக் கொண்ட ஒரு சிலை பாதுகாப்பு குழுவினை தங்களுக்குள் அமைத்து அவர்களின் பெயர்கள் மற்றும் விலாசம், தொலைபேசி எண்ணுடன் சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரிடம் வழங்கப்பட வேண்டும். மேற்படி பாதுகாப்பு குழுவினர்களின் குறைந்தபட்சம் ஐந்து நபர்கள் சுழற்சி முறையில் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் இரவு பகல் முழு நேரத்திலும் இருக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் தீவிபத்துக்களை தடுக்கும் பொருட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊர்வல அமைப்பாளர்கள் செய்து கொள்ள வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்கும் பொருட்டு குறிப்பாக இரவு நேரங்களில் மின் விளக்குகள் அமைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊர்வல அமைப்பாளர்கள் செய்து கொள்ள வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களுக்கு அருகில் சிலைப்பற்றிய விபரம் அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் நாள் மற்றும் நேரம் ஆகிய விபரங்கள் எழுதப்பட்டு பார்வைக்கு வைக்க வேண்டும். நீதிமன்ற ஆணை மற்றும் தமிழக அரசு விதிமுறைகளின்படி கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட வழித்தடங்களின் வழியேதான் ஊர்வலம் செல்ல வேண்டும்.
காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்ட நேரத்திற்குள் விநாயகர் ஊர்வலத்தினை முடித்திட வேண்டும். விநாயகர் ஊர்வலமானது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். மேற்படி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துக்செல்வதற்காக பயன்படுத்த உள்ள வாகனங்களை ஊர்வலம் நடத்துவதற்கு முதல்நாளே வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விநாயகர் ஊர்வலம் நடத்துபவர்கள் அரசு விதிமுறைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற ஆணை ஆகியவற்றினை கடைபிடிக்க வேண்டும். ஊர்வலம் நடத்துபவர்கள காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் முழுமையாக ஒத்துழைத்து விநாயகர் ஊர்வலத்தினை சிறப்பாக நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.