திருவண்ணாமலை, டிச. 3 –
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு கொண்டு வரக்கூடாது. மேலும், மகாதீபத்தன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை 2500 பக்தர்கள் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 6 ஆம் தேதி மகாதீப திருவிழா நடைபெறுகிறது. அன்று அண்ணாமலையார் மலை மீது ஏறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாமுருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தீபத்திருநாளான வரும் 6 ஆம் தேதியன்று 2,500 பக்தர்கள் மட்டுமே, அண்ணாமலையார் மலை மீது ஏற நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக்கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. 6 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்லவேண்டும். காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்றவேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மலையேறும் பக்தர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.