கும்பகோணம்,மார்ச். 05 –
கும்பகோணத்தில், பிரசித்தி மகாமக திருக்குளத்தின் கிழக்கரையில் உள்ள அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில், வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் மற்றும் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் ஆகிய மூன்று கோயில்களின் மாசிமக பெருவிழாவின் 9ம் நாளான இன்று மாலை திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் உளம் மகிழ்ந்தனர்
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறும் மாசிமகாப் பெருவிழாவை முன்னிட்டு இங்கிருக்கும் சைவ மற்றும் வைணவ தலங்கள் ஒன்றாக இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடத்தி வருவது வழக்கமாகும். இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் ஆகிய ஆறு சிவாலயங்களில் கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலும், ஏனைய ஆறு சைவ தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா நாளை (6ம் தேதி) நடைபெறுகிறது அதுபோலவே, விழா தொடர்புடைய ஐந்து வைணவ தலங்களில், சக்ரபாணிசுவாமி, ஆதிவராகபெருமாள் மற்றும் இராஜகோபாலசுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் 26ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், ஏனைய 2 தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா நாளை 6ம் தேதி நடைபெறுகிறது.
மேலும் கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 9ம் நாளான இன்று மாலை மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், உற்சவர் சுவாமி அம்பாளுடன், பஞ்சமூர்த்திகளும் தேருக்கு எழுந்தருள, நாதஸ்வர மேள தாளம், மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை பக்தி சிரத்தையுடன் வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். இதுப்போன்று, மகாமக குளத்தின் வடக்கு கரையில் உள்ள காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில், இன்று மாலை சுவாமி அம்பாளுடன், பஞ்சமூர்த்திகளும் தேருக்கு எழுந்தருள, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை சிவகோஷம் முழங்கியபடி, வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்
தொடர்ந்து, மகாமக குளத்தின், தென்மேற்கு பகுதியில் உள்ள சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மாலை உற்சவர் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.