காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் – ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு – 15 கோடி ரூபாய் வரையிலான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், டிச. 11 –
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைத்து வழக்காடிகள் பயன்பெற தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் பல வருடங்களாக தீர்த்து வைக்கப்படாமல் உள்ள சொத்து பிரச்சனை வழக்குகள், விபத்து காப்பீடு பிரச்சனைகள், குடும்ப உறவுகள் பிரச்சனைகள், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டது.
இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்காடிகளுக்கு உள்ளேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வுகள் நீதிபதிகளால் வழங்கப்பட்டது.
அதன்படி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பிரச்சினைகளும், விபத்து காப்பீடு பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றங்களில் தீர்வு ஏற்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளங்கோவன், திருஞானசம்பந்தம், ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், செந்தில்குமார், சரவணகுமார், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கார்த்திகேயன், ஜான், பார்த்தசாரதி, மற்றும் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும், காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.