கும்பகோணம், ஜன. 4 –
கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு அசத்தியிருந்தனர்.
கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் உள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி சார்பில், பொது மக்களிடையே கொரோனா மற்றும் ஓமைக்கிரான் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கிருமிநாசினி பயன்படுத்த அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ளுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுதல், போன்றவற்றை இன்னும் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல வண்ண கோலப்போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 120 பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் 60 வண்ண கோலங்களை போட்டு அசத்தியிருந்தனர், இக்கோலப்போட்டியில் முதல் பத்து இடங்களை பெற்றவர்களுக்கு பட்டு சேலைகளும், அடுத்த 30 இடங்களை பெற்றவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களும், எஞ்சிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.