சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் அணிவகுத்து செல்லும்போது பயங்கரவாதி சொகுசு காரில் வெடிபொருட்களை நிரப்பி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரர்களின் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசு, அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘நாம் நாட்டிற்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் (பாதுகாப்புப்படை வீரர்கள்) எல்லையில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். வீரர்களுடைய குடும்பத்துடன் நாம் இருக்க வேண்டும். நாம் எப்போதுமே அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்’’ என்றார்.