மீஞ்சூர், மார்ச். 23 –

தனியார் கப்பல் கட்டும் தளத்தில் நிரந்தர பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல்.அன்.டி கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் ஆகியும் இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த 140 தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருவதாகவும்,. மீன்பிடி தொழிலை விட்டு விட்டு அப்புறப்படுத்திய கிராம மக்களுக்கு நிரந்தர வேலை வழங்காமல் நிர்வாக தரப்பு இழுத்தடித்து வந்ததாகவும், அதனை கண்டித்து மீனவ கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும், தீர்வு கிடைக்காததால், இன்று சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

தொழிற்சாலை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தங்களது நிறுவனத்திற்கு வரும் தொழிலாளர்களையோ, ஆட்களையோ தடுத்து நிறுத்தாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் 200 மீட்டர் சுற்றளவில் போராட்டம் நடத்தகூடாது என உத்தரவு வாங்கப் பட்டுள்ளதாக காவல்துறையும் கிராமத்தில் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி கப்பல் கட்டும் தளத்திற்கு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற 150க்கும் மேற்பட்ட மீனவர்களை காவல்துறையினர் கைது செய்து மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேற்கொண்டு போராட்டம் நடத்தாமல் தடுக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பள்ளியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here