சீர்காழி, மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே  17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள்  தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 17 -ஆவது வார்டில் நகராட்சியின் செயலற்ற கணக்கு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டின் கீழ்  சன்சிட்டி நகர் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே புதிதாக அமைக்கப்படும் தார் சாலை தரமான முறையில் அமைக்கப்படவில்லை என்றும், சாலை பெயர்ந்து கையில் எளிதாக வரும்   வகையில் தரமற்று இருப்பதாக கூறியும்,  சாலையின் திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிப்பு பலகை  ஏதும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி,   ராஜேஷ்,  பாலமுருகன் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்களின் கணவர்கள் பந்தல் முத்து, திருச்செல்வம் மற்றும் அதிமுக கவுன்சிலரின் கணவர் மதிவாணன், முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

மேலும் பணிகளை தரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் உத்திரவாதம் அளித்தால் மட்டுமே பணிகளைத் தொடர்ந்து செய்திட வேண்டும் என கூறி சாலை அமைக்கும் வாகனங்களுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

மேலும் நகர் மன்றத்தில் தீர்மானம் வைக்காமல் அச்சாலை அமைக்கப்படுவதாகவும், நகரில் பல்வேறு வார்டுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்த சாலைகள் இருக்கும் போது வீட்டு வரியே இல்லாத இந்த நகர் பகுதிக்கு சாலை அமைக்கப்படுவதாக நகர்மன்ற உறுப்பினர்கள் மேலும் குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர். அதனால் தற்காலிகமாக தார் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here