கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வேட்பாளருமான காளியம்மாள் கும்பகோணம் பாலக்கரை அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி மேலக்காவேரி, பாபுராஜபுரம், இன்னம்பூர், வாளாபுரம், குடிதாங்கி, கொத்தங்குடி, நீலத்தநல்லூர், மேலாத்துக்குறிச்சி, தேவனாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில், மைக் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
மேலும் இவர் கடந்த 2019 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியிலும் மற்றும் 2022 இல் நடைப்பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டவர். மேலும் வளமான பேச்சாற்றல் மிக்கவர். பல்வேறு ஊடக நிகழ்ச்சிகளில் நேர்பட பேசுவதில் கலந்து கொண்டு மக்களிடம் பரிச்சயமானவர். இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் காளியம்மாள் தனக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்யுமாறு கும்பகோணம் மாநகரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.