மன்னார்குடி, பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வது வழக்கமாகும்.

இதனிடையே சில காலங்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை மர்மநபர்கள் திருடி செல்வதாக புகார்கள் எழுந்தவாறு இருந்தது.   இந்நிலையில் மன்னார்குடி அடுத்த கானூர் பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கேசவராஜ் (50), மகாதேவப்பட்டினம் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) ஆகிய இருவரின் இருசக்கர வாகனங்கள் கடந்த நவம்பர் மாதம் திருடு போய் உள்ளது.

அத்திருட்டுக் குறித்து இருவரும்  மன்னார்குடி நகர காவல் நிலையத்தில்  புகார் கொடுத்ததின் அடிப்படையில் இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்த குற்றப்பிரிவு  போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  அதில், இருவரும் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அடுத்த ரெங்கநாதபுரம் முருகேஷ் (21), முகில் சர்மா (20) என்றும், மேலும் அவர்கள்  இருவரும் அண்ணன் தம்பிகள் ஆவார்கள். மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்தே  இரண்டு பைக்குகளை திருடியதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரண்டு பைக்குகளை போலீசார் கைப்பற்றினர். அதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் துறையினர் இருவரையும் கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் மன்னார்குடி கிளைச் சிறையில் அவர்களை அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here