பொன்னேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், அண்ணா சிலை முன்பு திரண்ட வழக்கறிஞர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்நிலைகளில் நீதிமன்றம் கட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் எனவும், கடந்த மிக்ஜாம் புயலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதாகவும் முழக்கமிட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. எனினும் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.