கும்பகோணம், ஜூன். 13 –

கும்பகோணம் அருகேவுள்ள சோழபுரத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் காதல் ஜோடிகளை ஐந்து நாட்களில் கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் இருவரும் வெவ்வேறு சாதி வகுப்பினர் என்பதுக் குறிப்பிடத் தக்கது. இருப்பினும் கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சினையால் நடந்துள்ளது எனவும் தகவல் தெரிய வருகிறது. அக்கொலைக் குறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுளிப்ரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு வருகின்றார்.

 

சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்த சேகர் மற்றும் தேன்மொழி தம்பதியினர். இவர்களுக்கு, சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார்.

சேகர் கட்டடம் கட்டும் பணியாற்றி வருகிறார். மூத்த மகன் சக்திவேலும் தந்தையின் பணி செய்து வருகின்றார். மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள்  மூன்று பேர்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில்  சரண்யாவின் தாயார் தேன்மொழிக்கு உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருடன் சரண்யாவும் தாயாருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்துள்ளார்.

மேலும், அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர்,  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த மோகன் (26) என்பவரின் தாயாரின் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்து போது, சரண்யாவிற்கும் மோகனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரது தாயார்களும், சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசி தங்களது காதலை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணமான காதல் ஜோடியினர் இன்று காலை சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருந்த நிலையில்,  காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து காதல் தம்பதியர்கள் வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு  அரிவாளை எடுத்துக் கொண்டு மோகனை வெட்டுவதற்காக சென்ற போது அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் தப்பி ஓட அவரை விரட்டிச் சென்று கொடுரமாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா டிஎஸ்பிக்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றிவேந்தன் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர்  இப்படுகொலைகள் குடும்ப பிரச்சனை காரணமாக நடந்துள்ளது. எனவும், படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  இப்படுகொலை தொடர்புடைய சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here