கும்பகோணம், அக். 23 –
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரக கோயில்களில் முக்கியமாக தலமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின் சிலைக்கு பாலபிஷேகம் செய்யும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது.
இக்கோயில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது ரூ.5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், நாளை அக் 24 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து (21-ம் தேதி) மாலை முதலாம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாரதனையும், நேற்று 22-ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இன்று 23-ம் தேதி 4 மற்றும் 5 ம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து நாளை 24-ம் தேதி காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்கு குடமுழுக்கும், தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பின்னர் மகாதீபாரதனை நடைபெறவுள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் ஆதீனங்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக கோயில் தக்கார் இளையராஜா, உதவி ஆணையர் நித்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.