கும்பகோணம், ஜூன். 15 –
கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில், சுழலும் சுதர்சன சக்கரத்துடன், சக்கரபாணி சுவாமி விஜயவல்லி மற்றும் சுதர்சனவல்லி தாயாருடன் எழுந்தருள, வைகாசி பௌர்ணமி தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமான கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி சுவாமி திருக்கோயில் ஆகும்.
ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு ஸ்ரீ விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை அழித்த பின்னர் காவிரி தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு பிரம்மனின் கையில் வந்தமர்ந்தது. பிரம்மா .. அதனை, அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை காட்டிலும் பன் மடங்கு பிரகாசமாய் ஒளிர.. அதனை கண்டு, சூரியன் கர்வம் கொண்டார். சூரியனின் கர்வத்தை அடக்க ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை தன்னுள் அடக்கியது. ஒளியிழந்த சூரியன் தன் தவற்றை உணர்ந்து தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க பிராத்தணை செய்ததால் ஸ்ரீ சக்கரத்தில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமியாக சூரியனுக்கு அருள் புரிந்தார்.
அது முதற்கொண்டு ஸ்ஷேஸ்திரம் பாஸ்கர ஸ்ஷேஸ்தரம் என வழங்கலாற்று இத்தலத்தை சிறப்பித்து திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ சக்கரபாணி சுவாமிக்கு செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி, குங்குமம் ஆகிய பொருட்கள் கொண்டு அர்ச்சணை செய்யப்படுகிறது.
இத்தலத்தில் சூரியன், பிரம்மன், மார்கண்டேயர், அக்னிபகவான், அகிர்புதன்ய மகரிஷி ஆகியோர் வழிபட்ட புனித தலமான இத்திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்த புஷ்கரணியில் சூழலும் சுதர்சன சக்கரத்துடன் ஸ்ரீ விஜயவள்ளி தாயார், ஸ்ரீ சுதர்சனவள்ளி தாயார் சமேதராய் ஸ்ரீ சக்கரபாணி சுவாமி விஷேச மலர் அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருள, வைகாசி பௌர்ணமி தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.