கும்பகோணம், செப். 05-
கும்பகோணம் துக்காம்பாளையத் தெரு, அருகே பழையபேட்டையில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ மோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் ஸ்ரீ மோலாணி ஆதிமுனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இத்திருக்கோயிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சப்தகன்னியர் போன்ற தெய்வங்கள் இக்கோயிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இத்திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி சனிக்கிழமை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹ_தியும், தீபாராதனை நடைப்பெற்ற பிறகு, மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து சிவாச்சாரியார் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சரவணன் கலந்துக்கொண்டார். மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகமும், நடைபெற்றது.
மேலும், இவ்விழாவிற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ பருவதராஜகுல உறவின் முறையார் மற்றும் திருப்பணி கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.