கும்பகோணம், ஜூலை. 07 –
கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூரில் உலகிலேயே முதன் முறையாக விவசாயத்தில் திருவள்ளுவர் உருவத்தை வயலில் நடவு செய்து புதிய முயற்சியை மேற்கொண்ட இயற்கை விவசாயியை அரசு தலைமை கொறடா நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூர் கிராமத்தில் உலகிலேயே முதன் முறையாக இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல்லுக்கு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் வயல் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் திருவுருவ வடிவத்தை வயலில் நடவு செய்து இயற்கை விவசாயி இளங்கோவன் என்பவர் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதற்காக நேபால் மாநிலத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகத்தையும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தையும் இதற்காக பயன்படுத்திவுள்ளார். மேலும் நீளம் 50 அடியும், அகலம் 45 அடியும் கொண்ட வயல் பரப்பில் திருவள்ளுவரின் உருவ அமைப்பை நடவு செய்துள்ளார்.
இதனை கழுகு பார்வையில் பார்க்கும் போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையிலான முழு உருவத்தை காட்டுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.
இதுப்பற்றித் தகவலயறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயி இளங்கோவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் மலையப்பநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோரும் பார்வையிட்டு விவசாயிக்கு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வின் போது மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இது குறித்து இயற்கை விவசாயி இளங்கோவன் கூறுகையில், நான் இயற்கை விவசாயத்தை கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வந்தேன். அதுபோல இந்த வருடம் 2000 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர், அவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதி உள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில், திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடவு செய்ய கடந்த வருடம் முதல் நினைத்து வந்தேன். அதனை தொடர்ந்து இதனை கடந்த 5 நாட்களாக நான் தனி ஆளாக நின்று நட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நட உள்ளேன் என்று தெரிவித்தார்.





















