கொட்டிவாக்கம், ஏப். 14 –
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக் கூடிய ராட்சத குழாய் உடைந்து அதிலிருந்து வெளியேறக்கூடிய கழிவு நீரானது மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியை சூழ்ந்து தெருக்களில் குளம்போல் தேங்கியுள்ளது.
குடியிருப்பை சுற்றி தேங்கியிருக்கும் கழிவு நீரால் அப்பகுதி மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை அங்கு உருவாகி இருப்பதால் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ராட்சத கழிவுநீர் வடிகால் குழாய் கடந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் உடைந்து கழிவுநீர் வெளியேறியுள்ளது. தொடர்ந்து இது போன்று குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்பட்டு நாங்கள் கழிவுநீரில் தத்தளிக்கும் நிலைக்கு உள்ளாவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.
பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை குடிநீர் வாரிய 14வது மண்டல பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ராட்சத குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி தற்காலிக தீர்வுக்கானதாக இல்லாமல் நிரந்தர தீர்வை வழங்க க் கூடியதாக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அவர்களிடம் அதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.