கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்றதும், கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் 4ம் நாளான நேற்றிரவு வெகுச்சிறப்பாக நடைபெற்ற கல்கருட சேவையில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் போற்றப்படுகிறது. இத்தலத்தில், ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு கடந்த 16ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை முன்னிட்டு கல்கருட பகவானை முதலில் சன்னதியில் இருந்து வெளியே வரும் போது 4 பேரும் தொடர்ந்து 8, 16, என 32 பேர் வரை தூக்குவது வழக்கம் கல்கருடன் மீண்டும் சன்னதிக்கு திரும்பும் போது 32 பேரில் இருந்து 16, 8 என ஆட்கள் எண்ணிக்கை குறைந்து கடைசியாக 4 பேருடன் மீண்டும் சன்னதியை சென்றடைந்தது. கல்கருட பகவானை தொடர்ந்து 7 வியாழக்கிழமை வழிபடுவதன் மூலம் பிராத்தனை அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். தொடர்ந்து இரவு ஓலைச்சப்பரமும் நடைபெற்றது.
இவ்விழாவின் 8ம் நாளான 23ம் தேதி சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பும் பிறகு, 9ம் நாளான 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவமும் 10ம் நாளான 25 ஆம் தேதி சப்தாவர்ணமும், நிறைவாக 11 ஆம் நாள் 26 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான மார்கழி தெப்போற்சவமும் இனிதே நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் பிரபாகரன், கோவில் பட்டாச்சாரியார் கோபி, மற்றும் கோவில் நிர்வாகிகள் பணியாளர்கள் உபயோதாரர்கள் சிறப்பாக செய்தனர்.