காஞ்சிபுரம், மே. 28 –
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபரமேஸ்வர விண்ணகரம் எனும் பெயர் பெற்றதுமான வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. கருடசேவை உற்சவத்தை ஒட்டி வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் மஞ்சள் பட்டு உடுத்திய கருட ஆழ்வார் மீது எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து வைகுந்த பெருமாளுக்கு சிறப்பு தூப தீப ஆராதனை காட்டப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் உலா வந்தார்.
கருட சேவை உற்சவ நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுந்த பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.























