காஞ்சிபுரம், மே. 21 –
தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களாக கன கனமழை பெய்தது இதன் காரணமாக பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள கிளை ஆறுகளிலிருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்த உபரிநீரானது வானியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக தற்போது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்று நீரானது பெருக்கெடுத்து ஓடுகின்றது.
பெரும்பாக்கம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். கோடை காலத்திலும் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ள பெருக்கு காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.