செங்கல்பட்டு, மார்ச். 30 –
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், கிருஷ்ணா ஃபேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் பீடியா இன்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்நிலையில், அந்த இடத்திற்கு சொந்தமான ஆவணங்களை திருடி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் பதிவு செய்து இடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்படுவதாக அந்த நிறுவனத்தில் இயக்குனர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சந்தித்து அவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கமிஷனர் அமல்ராஜ் இப்புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர் சிவக்குமார் விசாரிக்க அறிவுறுத்திய நிலையில், அவர் அப்புகார் குறித்து விசாரணை மேற் கொண்டார்.
ஆய்வாளர் சிவக்குமார் மேற்கொண்ட விசாரணையில் கூடுவாஞ்சேரியில் உள்ள ரூ. 120 கோடி மதிப்பிலான 3.98 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணங்களை திருடி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபட்ட உண்மை நிலை தெரிய வந்தது.
மேலும் அதனைத்தொடர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து இடத்தை அபகரிக்க முயன்ற பூங்கா தெருவை சேர்ந்த சங்கரன், மீனாட்சி நகரை சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்த கூடுவாஞ்சேரி காவல்நிலைய போலீசார் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்து தற்போது தலைமறைவாக உள்ள இவர்களின் நண்பர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






















