பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பெரவள்ளூர் போரக்ஸ் நகரில் சர்வே எண்.124/11-ல் பெரிய ஏரியும்,சர்வே எண்-126/12-ல் கால்வாயும் அமைந்துள்ளது.
இந்நிலையில் அந் நீர்நிலைப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனை பிரிவுகளுக்கான அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனை அறிந்து பெரவள்ளூர் கிராம பொதுமக்கள் இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அத் தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தாமல் லேயவுட் போடும் பணிகளை தீவிரமாக தொடர்ந்து செய்து வருவதால் மீண்டும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரவள்ளூர் கிராம பொதுமக்கள் சார்பில் இன்று புகார் மனுவை அளித்தனர். மேலும் அம்மக்கள் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டிப்பதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்கள் கோரிக்கை மனுக்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கெதிராகவும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கெதிராகவும் வருகின்ற திங்கட்கிழமை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாகவும் அக்கிராம மக்கள் அரசுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
                
		



















