தஞ்சாவூர், ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் கிடைக்கும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமைவது உறுதி எனவும்  அதுபோல தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மோடியின் பல திட்டங்கள் இத்தொகுதிக்கு நேரடியாகக் கிடைக்கும். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் தஞ்சாவூருக்கு மத்திய அரசு பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, வங்கிக் கணக்கு தொடக்கம் என பல்வேறு திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், ஆனால்  தமிழக அரசு விவசாயத்தை லாபகரமானதாக மாற்றவில்லை. நீர் மேலாண்மையிலும் பின்தங்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. கலாசார முகமாக உள்ள தஞ்சாவூருக்கு எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என அப்போது திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.

இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் தஞ்சாவூரை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும் மேலும் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது என தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here