திருவாரூர், மார்ச். 21 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு அந்த நிலத்தில் ஆடு மற்றும் மாடு கிடை போட்டால் வயலுக்குச் சத்தான உரம் கிடைக்கும். மேலும் அதனால் மண் வளமும் மேம்படும் என்ற அடிப்படையில் விவசாயிகள் ஆட்டு கிடை போடுவது வழக்கம். அதன்படி நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் ஆட்டு கிடை போட்டு வருகின்றனர்.
மேலும், குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தக் காலகட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் (கீதாரிகள்), ஆடுகளை மந்தை மந்தையாக திருவாரூர் மாவட்ட பாசன பகுதிகளுக்கு கொண்டு வருகிறார்கள்.
மேலும் அவர்கள் கிராமபகுதிகளில் ஆங்காங்கே தங்கிப் பகலில் ஆடுகளை மேய்த்தும், தொடர்ந்து இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். அதனுள்ளே அவ் ஆடுகளை அடைத்து விடுகிறார்கள். இந்த ஆடுகள் இரவுப் பொழுதை அங்கே செலவிடும்.
இதனால், பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகளின் சிறுநீரும், புழுக்கை (கழிவு) களும் வயலுக்கு அப்படியே இயற்கை உரமாக கிடைக்கிறது. ஒரு இரவுக்குப் பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் கீதாரிகளுக்கு ஆடுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் அதற்குண்டான தொகையை நில உரிமையாளர்கள் அவர்களுக்கு வழங்குவார்கள்.
அது போல், கோடைக் காலத்தில் ஆடுகளுக்கு மேய்வதற்கான புல் பூண்டுகள் கிடைக்காத காரணத்தினாலும், ஆடு வளர்ப்போர், அப்பகுதிகளுக்கு வந்து கிடை போடுவதற்காக ஒவ்வொரு வருடமும் வருகின்றனர்.
இப்படிக் கிடை போடுவதற்காகக் பாசன மாவட்டங்களுக்கு வரும் ஆடு மேய்ப்பவர்கள் ஆறுகளில் தண்ணீர் வந்து சாகுபடிப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கி விடுகிறார்கள்.
மேலும் இதுக்குறித்து தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமமூர்த்தி தெரிவிக்கும் போது, அரசின் நிலையற்ற கொள்கையினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறதெனவும், மேலும், அதனால் விவசாய நிலங்களில் அடிக்கடி உரங்கள் போடுவதால் மண்ணின் வளமும் கெட்டுவிடுகிறதெனவும், எனவே விவசாய நிலத்தினை வளம் கொண்டாத மாற்றிடும் செயலில் ஈடுப்படும் ஆட்டு கிடை போடுவதை மட்டும் தொழிலாக கொண்டுள்ள அவ் விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்க வேண்டுமெனவும்,
ஆட்டு கிடை போடுவதால் தேவையற்ற உரங்கள் போடத் தேவையில்லை எனவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும், ஆட்டு கிடை போடுவதால் கிடைக்கும் இயற்கையான உரத்திற்கு ஈடு இணை இல்லை என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்..
பேட்டி: ராமமூர்த்தி,
(பொதுச் செயலாளர்)
தமிழக விவசாயிகள் நல சங்கம்.
அரசவனங்காடு.