ஜெருசலேம்:
இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.