திருவாரூர், ஆக. 28 –
நாடு முழுவதும் எதிர் வரும் ஆக 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் வகையில் மக்கள் பரபரப்பாகி வரும் நிலையில், அதுப்போன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திவிழாவினை முன்னிட்டு அப்குதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தயாரித்து வரும் கண்கவரும் பல விதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி படு மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், பாரதியஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு பின்பு ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்திடும் நிகழ்ச்சிகளை, தொடர்ந்து இப்பகுதியில் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசின் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நடைப்பெறாமல் இருந்த நிலையில் இவ்வாண்டு திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறை அனுமதியோடு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விநாயகர் ஊர்வலத்திற்காக திருத்துறைப்பூண்டி அண்ணா நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த துங்காராம் மனைவி புஷ்பா சிறு வயது மகன்கள் மற்றும் உறவினர்கள் 10 பேர் இங்கு முகாமிட்டு விநாயகர் சிலைகளை தயாரித்து வண்ணம் தீட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இச்சிலைகள் ரூ. 1500 முதல் 30,000 வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தயாரித்துள்ள விநாயகர் சிலைகள் தெய்வ அம்சம் பொருந்திய அழகுடன் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாக்பீஸ் தயாரிக்கும் கால்சியம் கார்பனேட் சுண்ணாம்பு பவுடரால் இந்த சிலைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.