திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக மரம் மற்றும் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதிக்கு செல்லும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. அந்நேரம் அவ்வழியாக சென்ற ஒரு மாடு மற்றும் ஐந்து ஆடுகள் அவ்விபத்தில் சிக்கி பலியானது.
அக்கோர விபத்தைக் கண்ட அவ்வூர் மக்கள் பெருத்த அதிர்ச்சிக்குள்ளானர்கள். மேலும், அக்கிராம மக்கள் மற்றும் அவ்வுயிரினங்களின் சொந்தக்காரர் உள்ளிட்டவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் உயிரிழந்தால் ஏற்படும் துக்கமாக அதனைப் பாவித்து பெருத்த அழுகுரல் சத்தத்துடன் அவர்கள் அழுது கதறியது. அப்பகுதியில் அந்நிகழ்வைக் கண்டு கடந்தவர்களையும் கண் கலங்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து மிக ஆவேசத்துடன் அவ்வூர் மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மின் வாரியத்தின் அலட்சியப்போக்கை அவ்விபத்துக்கு காரணமென குற்றம் சாட்டியும், மேலும் அதுக்குறித்து தகுந்த விசாரணையை, மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து நடத்தும் வரை வேறு யாரையும் அச்சம்பவம் குறித்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றவாறு ஆவேசக் குரலெழுப்பினார்கள்.
மேலும் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து, அவ்விடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர், அங்கு விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.
மேலும் மழை திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது.