கும்மிடிப்பூண்டி, செப். 25 –
தமிழக ஆந்திர மாநில எல்லையான ஆரம்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர் இவரது மகன் நரேஷ் (24). பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒமேகா எனும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று நரேஷ் இரவு 9 மணி அளவில் வீடு திரும்பும் போது, எளாவூர் எனும் இடத்தில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள எம். ஆர் தாபா எனும் ஹோட்டலில் உணவருந்த சென்றுவுள்ளார். அப்போது அவரது செல்போனில் சார்ஜ் இல்லாததால் அக்கடையில் பணிபுரியும் காசாளரிடம் செல்போனை சார்ஜ் செய்யுமாறு செல்போனை கொடுத்துவிட்டு உணவருந்திய நரேஷ் திரும்பி வந்து பார்க்கும்போது காசாளர் நரேஷின் செல்போனை ஆய்வு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் தாபா உரிமையாளர்கள் இருவர் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து பொறியியல் பட்டதாரி நரேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த நரேஷ் இந்த தகவலை வீட்டில் சொல்லாமல் மறைத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை வலியால் துடித்த நரேஷை தந்தை சங்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனை வாசலிலேயே நரேஷ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து நரேஷின் தந்தை சங்கர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக இவ் வழக்கை பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவு மற்றும் சிசிடிவி பதிவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இறப்புக்கான விவரம் கிடைக்கும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய தாபா ஹோட்டலுக்கு சென்ற போது, கடை உரிமையாளர்கள் சிசிடிவி ஹார்ட் டிஸ்கின் பாஸ்வேர்டு எண்ணை தர மறுப்பதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நரேஷின் உடலை காவல்துறையினர் உறவினர்களிடம் ஒப்படைக்க வந்தனர்,
அப்போது நரேஷின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மேலும் மகனின் மரணத்திற்கு காரணமான தாபா கடை உரிமையாளர்களை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்து, அதனைத் தொடர்ந்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.